அமெரிக்கா : கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டி இத்தாலியை மிஞ்சி உள்ளது.

Must read

வாஷிங்டன்

மெரிக்காவில் கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டியதால் இத்தாலியை விட அதிக மரணம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது.  தற்போது சீனாவில் அடியோடு குறைந்துள்ளது.  ஆனால் முன்பு சீனாவில் பரவியதை விட அதிகமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி உள்ளது.   குறிப்பாக அதிக அளவில் பாதிப்பும் மரணமும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

முன்பு பாதிப்பு அமெரிக்காவில் அதிக அளவிலும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை இத்தாலியிலும் அதிகமாக இருந்தது.   ஆனால் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கையைப் போல் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இன்று அதிகாலை கணக்கின்படி அமெரிக்காவில் 5.32 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு 20,577 பேர் உயிர் இழந்துள்ளனர்.

தற்போது இத்தாலியில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.  அங்கு இன்று அதிகாலை கணக்கின்படி 19,466 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இது அமெரிக்காவை விடக் குறைவாகும்.  ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் குறைந்து வருவதால் விரைவில் இது முடிவுக்கு வரும் என மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

கத்தோலிக்க தலைவரான போப் பிரான்ஸிஸ், ”இறப்பு மற்றும் இருட்டு எப்போதும் நிலைத்து இருக்காது.  விரைவில் முடிவுக்கு வரும்.  எல்லாம் நன்மையாக முடியும் என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.   அந்த நம்பிக்கையை கை விடக்கூடாது” என மக்களுக்குத் தைரியம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க்,நியூஜெர்சி மற்றும் வாஷிங்டன் மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பெரும்பாலான கொரோனா மரணம் நியூயார்க் நகரில் மெட்ரோபாலிடன் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இங்கு மக்கள் சுதந்திரமாக சமூக  இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடமாடி வருகின்றதே முக்கிய காரணமாகும்.

More articles

Latest article