பாரிஸ்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பரிந்துரை செய்தன.   குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த பரிந்துரையை செய்ததுடன் அமெரிக்காவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருப்பை மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை சுமார் 1.08 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டறியவில்லை என்பதே உண்மையாகும்.  ஆயினும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தி வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 27 ஆம் தேதி முதல் மருந்தைப் பயன்படுத்தியதில் சுமார் 100 பேருக்கு வேறு உடல்நிலை கோளாறுகள்  ஏற்பட்டுள்ளன.  நான்குபேர் மரணம் அடைந்துள்ளனர்.  அந்த 100 பேரில் இதுவரை 3 பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.  இந்த தகவலை பிரான்ஸ் நாட்டின் தேசிய மருந்து பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து அளித்த கொரோனா நோயாளிகளில் 82 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.  இவர்களில் பெரும்பாலானோர் இந்த மருந்து சாப்பிட்ட பிறகு  இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர்   இது போலப் பலருக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மருந்துகளை மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.  மருத்துவர்கள் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.  பொதுவாக ஒரு நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து  மற்ற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கும் போது பக்க விளைவுகள் நிச்சயம் உண்டாகும் என பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.