சியோல்

தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது.

உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து ஒரு சில நாடுகள் தப்பி வருகின்றன.  அவற்றில் தென் கொரியாவும் ஒன்றாகும்.  ஒருகாலத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்த தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.   அதையொட்டி பார்கள், இரவு விடுதிகள் போன்றவை திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

இந்நிலையில் ஒரே நாளில் தென்கொரியாவில் புதியதாக 250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஊரடங்கு முடிவுக்கு பிறகு திறக்கப்பட்ட பார்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற கேளிக்கை இடங்களுக்கு சென்று வந்தவர்கள் என அந்நாட்டு பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி தென் கொரிய அரசு ஊரடங்குக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டது.  அத்துடன் இன்னும் 2 வாரங்களுக்கு பூங்காக்கள் ,பார்கள், மால்கள், இரவு விடுதிகள், அருங்காட்சியகங்கள் என அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.   சமூக இடைவெளி விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.