சென்னை

மிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு ஜூன் 30 வரை 5 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  பொதுமக்கள் இந்த ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று மேலும் மேலும் பரவி வருகிறது.   முதலில் சென்னை நகரில் மட்டும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மாநிலம் எங்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆறாம் கட்ட ஊரடங்கு பல விதித் தளர்வுகளுடன் ஜூலை 1 முதல் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாதம் அனைத்து ஞாயிறு அன்றும் தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   எனவே இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 வரை தமிழகம் முழுவதும்,ம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு இருந்த போதிலும் பால் கடைகள், மருந்துக்கடைகள், பத்திரிகை விநியோகம் ஆகியவை இயங்கி வருகின்றன.  இன்று மாநிலம் முழுவதும் உள்ள டாஸாக் கடைகள் முழுவதுமாக மூடப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  முக்கிய சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜிவ் காந்தி சாலை ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் காவல்துறையினர் ரோந்து மற்றும் டிரோன்கள் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.  இன்று ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முழு ஊரடங்கை மீறி வெளியே வரும் 4 மற்றும் 2 சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அதை ஓட்டி வருபவர்கள் மீது வழக்கும் பதிவு  செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், சாலையில் தேவையில்லாமல் நடமாடுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.