ட்டாவா

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியர்கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நாளை முதல் நீக்குகிறது.

கொரோனா பரவல் காரணமாகக் கனடா அரசு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது.  அதையொட்டி இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் பயணிகள் விமானம் வர விதிக்கப்பட்ட தடை இன்று (செப்டம்பர் 26) வரை அமலில் உள்ளது.  இன்றுடன் அந்த தடை முடிவடைந்துள்ள நிலையில் கனடா அரசு இந்தியப் பயணிகளுக்கான தடையை நீக்கி உள்ளது.

இதையொட்டி நாளை அதாவது செப்டம்பர் 27 முதல் ஏர் கனடா விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து தனது விமானச் சேவைகளைத் தொடங்குகிறது.  இதைப் போல் ஏர் இந்தியா நிறுவனம் வரும் 30 ஆம் தேதி முதல் கனடாவுக்கு மீண்டும் விமானச் சேவைகளைத் தொடங்க உள்ளது.   இதையொட்டி கனடா அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கொரோனா நிலைமையின் அடிப்படையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இந்தியா கனடா இடையே விமானச் சேவை தொடங்குகிறது.  இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமானம் கிளம்பும் 18 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆகும்.

இவை டில்லி  விமான நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவசியம் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,  மேலும் அவற்றை வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது கட்டாயம் ஆகும்” எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.