நொய்டா

நொய்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் கட்டுமான  நிறுவனர் வங்கிக்குப் பணம் செலுத்தாததால் வீடு வாங்கியோர் வெளியேற நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நொய்டா நகரில் உள்ள 75 ஆம் செக்டரில் எகோ சிடி என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கள் கார்டனியா இந்தியா லிமிடெட் என்னும் கட்டுமான நிறுவனம் மூலம் கட்டப்பட்டவை ஆகும். இந்த நிறுவனத்திடம் வீடு  வாங்கியோர் தங்கள் பணத்தை முழுமையாகச் செலுத்தியும் நிறுவனம் கட்டுமான வேலைகளை முடிக்கவில்லை. இதனால் வீடு வாங்கியோர் அரைகுறையாக முடிக்கப்பட்ட வீடுகளில் குடி புகுந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்கள் குடி புகுந்த போதிலும் நிறுவனம் இன்று வரை கட்டிட வேலைகளை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் இந்த நிறுவனத்தால் குடியிருப்பு சான்றிதழை நகராட்சியிடம் இருந்து பெற முடியவில்லை. அதனால் இங்கு வசிப்பவர்கள் சங்கம் அமைத்தும் அதைப் பதிவு செய்ய முடியாமல் உள்ளனர்.  அத்துடன் யூனியன் வங்கியில் இருந்து இவர்களை காலி செய்யச் சொல்லி தற்போது நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து யூனியன் வங்கி மேலாளர், “இந்த கட்டிடம் கட்ட நாங்கள் ரூ.78.45 கோடி கடன் அளித்துள்ளோம். அதற்கு வருட வட்டி 16% ஆகும். ஆனால் நிறுவனம் இதுவரை எங்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை. தற்போது எங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் பணம் வரவேண்டி உள்ளது. இது குறித்து வீடு வாங்கியோருக்கு பலமுறை தகவல் அளித்துள்ளோம். ஆயினும் பணம் வராததால் நாங்கள் காலி  செய்ய நோட்டிஸ் அளித்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்டனியா இந்தியா லிமிடெட் நிறுவனம், “இந்த விவகாரம் குறித்து நாங்கள் வங்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த  பிரச்சினையை நாங்கள் தீர்த்து விடுவோம்” எனக் கூறி உள்ளது.