பில்லூர்

தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர  மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் 100 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.  தற்போது அணையின் நீர் மட்டம் 97 அடியாக உள்ளது.  விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் அணைக்கு வந்துக் கொண்டு இருக்கிறது.  அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

எனவே பவானி ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களுக்குத் தொடர்ந்து 2 நாட்களாக வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   மாநிலம் எங்கும் தொடர் மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை, பரம்பிக்குளம் அணைகளும் நிரம்பி வருகின்றன.  பரம்பிக்குளம் அணை (77 அடி உயரம்) முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

ஆழியாறு அணையின் உயரம் 120 அடி ஆகும்  அதில் 117.8 அடி உயரத்துக்கு நீர் நிரம்பி உள்ளது.   தற்போது விநாடிக்கு 2410 கன அடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   இந்த அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டுக்காக 516 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதைப் போல் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அடவி நயினார் நீர்த் தேக்கம் இரண்டாம் முறையாக நிரம்பி வழிகிறது.  அங்குள்ள கடையம் ராம நதி, கடனா நதி, கருப்பா நதி நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.   கடும் வெள்ளம் காரணமாகக் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.