டெல்லி :
கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, இன்று உலக நாடுகள் அனைத்திலும் மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கிவைத்திருக்கும் நிலையில்.
இந்திய தலைநகர் டெல்லியில் இந்த வைரஸ் பரவலை தடுக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளார், இந்த திட்டத்திற்கு “5 டி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதலாவது ‘டி’ – பரிசோதனை (டெஸ்டிங்)
வைரஸ் பரவலை தடுக்க விரிவான, தீவிரமான பரிசோதனைகளை செய்வதே சிறந்த வழி என்பதால், டெல்லியின் முக்கிய வைரஸ் பரவல் மையங்களாக உள்ள இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது, இதற்கு தேவையான உபகரணங்கள் வரும் வெள்ளிக்கிழமை வந்துவிடும் என்று கூறினார்.
இரண்டாவது ‘டி’ – தடமறிதல் (Tracing)
பரிசோதனை செய்த பிறகு பாதிக்கப்பட்ட நபருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று தடமறிதல் வேண்டும். எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபரை உடனே தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு டெல்லி போலீசார் உறுதுணையாக செயல்படுவர்.
மூன்றாவது ‘டி’ – சிகிச்சை (Treatment)
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி, ஜிபி பண்ட், ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் மூத்த குடிமக்கள், நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 2,450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இவை தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படுவோர் ஓட்டல் அறைகள் மற்றும் தர்மசாலாக்களில் தங்க வைக்கப்படுவர், இதற்கென 12 ஆயிரம் ஓட்டல் அறைகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
நான்காவது ‘டி’ குழுப்பணி’ (Teamwork)
மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணக்கமாக செயல்படவேண்டும், அவரவர் மாநிலத்தில் சிறந்த பலனளித்த சிகிச்சை முறைகளை பகிர்வது அனைவருக்கும் சிறந்தது.
ஐந்தாவது ‘டி’ கண்காணிப்பு (Tracking)
மேற்கூறிய கொரோனாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பது.
கொரோனா வைரஸ் என்ற புதிய நோய் பரவத்தொடங்கி இருப்பதாக ஜனவரி மாதம் 11ந் தேதி உலக சுகாதார அமைப்பு அறிவித்த நிலையில், இந்தியாவில் முதலில் ஜனவரி 30ல் இந்த தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது, தற்போது வரை 4421 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில், பிப்ரவரி இறுதி வாரத்தில் பரவ தொடங்கி, மார்ச் 5 ல் பெரியளவில் பரவத்தொடங்கியவுடன், டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில் தற்போது, 2 கோடி மக்கள் வாழும் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரவிந்த் கெஜ்ரிவால் ‘5 டி’ எனும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு முன் இந்திய ஆட்சி பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.