டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில்,. கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாககெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக டெல்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலும் கைது செய்யப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா பலமுறை மனு செய்தும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ரூ. 338 கோடி பணம் கைமாறியதற்கான பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகவும், வழக்கின் விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை வெளியே விட்டால் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவார் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டதோடு, விசாரணை தாமதமானால் மூன்று மாதங்களுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.]
இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.
தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு மூன்றாவது முறையாக இன்று (ஜனவரி 3ந்தேத) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கேஜரிவால் இன்று ஆஜராகமாட்டார் என்று ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில அமைச்சர் செளரவ் பரத்வாஜ், “அரவிந்த் கேஜரிவாலை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், கேஜரிவால் தேர்தல் பிரசாரம் செய்வதை தடுக்க நினைக்கின்றனர். மனீஷ் சிசோடியாவை கைது செய்து ஓராண்டு ஆகியும், அவருக்கு எதிரான ஆதாராங்களை அமலாக்கத்துறையினரால் திரட்ட முடியவில்லை. தற்போது கேஜரிவாலை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். பாஜகவினரால் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட சுவேந்து அதிகாரி, முகுல் ராய், பேமா காந்து, அஜித் பவார், ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “ED விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் ஆனால் ஏஜென்சியின் அறிவிப்பு சட்டவிரோதமானது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதே அவர்களின் நோக்கம். அவர்கள் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுக்க விரும்புகிறார்கள்” என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.
இதற்கிடையில் அமலாக்கத்துறையில் ஆஜராகாத கெஜ்ரிவால் அதிகாரிகளால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.