டில்லி

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் சதவிகித விவரங்கள் அறிவிக்கப்படாததற்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.  நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை நடந்த இந்த வாக்குப் பதிவில் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு நடந்தது.  ஆயினும் பிற்பகல் சற்றே வேகம் பிடித்தது.

மாலை  6 மணிக்கு சுமார் 60%க்கும் குறைவான வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.  பொதுவாக வாக்குப்பதிவு நடந்த அன்று இரவு பதிவான வாக்குகள் மற்றும் சதவிகிதம் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிவிப்ப்து வழக்கமாகும்.

ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் இது குறித்து அறிவிக்காமல் உள்ளது.    இது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களில் ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என உள்ளன.