டெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள்,  எதிர்பாராதவிதமாக  பலியானால்,  அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் 3வது கட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று காலை (April 1)  நிலவரப்படி இந்தியாவில், 1,637 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 1,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  38 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் எதிர்த்து போராடி 132 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில்  120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 2 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், எதிர்பாராதவிதமாக மரணித்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் மாநில அரசால் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே மத்தியஅரசு ரூ.50 லட்சம் காப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.