டில்லி

றைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை மாநிலங்களவை ஊழியர் நிதிக்கு அவர் குடும்பத்தினர் வழங்கி உள்ளனர்.

பாஜகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி மரணம் அடைந்தார்.  அவர் மத்திய அமைச்சகத்தில் நிதித்துறை உள்ளிட்ட பல துறைகளை நிர்வகித்து வந்தார்.  அத்துடன் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெட்லி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் உடல் நலம் நலிவுற்ற அருண் ஜெட்லிக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.   சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி மரணமடைந்தது பாஜகவினரை மட்டுமின்றி பல எதிர்க்கட்சியினரையும் துயரில் ஆழ்த்தியது.   நான்கு முறை மக்களவை உறுப்பினர் என்னும் முறையில் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி மாநிலங்களவை தலைவர் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், “மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் மனைவி என்னும் முறையில் எனக்கு அரசு ஓய்வூதியம் வழங்க உள்ளது.   மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியத்துக்கு அருண் ஜெட்லி மிகவும் பாடுபட்டார்.

ஆயினும் இந்த ஓய்வூதியத்தை மக்களவை ஊழியர் நல நிதிக்கு அளிக்குமாறு நான்  கேட்டுக் கொள்கிறேன்.    அவர் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார்.   அதனால் அவருடன் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களுக்கு அவருடைய ஓய்வூதியம் பயன்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.    அருண் ஜெட்லிக்கும் இதுவே விருப்பமாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் நகலைப்  பிரதமர் மோடிக்கு, சங்கீதா ஜெட்லி அனுப்பியுள்ளார்.