டில்லி
பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ஒருவர் கடன் தள்ளுபடியை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி ஒன்றுக்கு அருண்ஜேட்லி பதில் அளித்தார். அப்போது மேற்கூறிய தகவலை தெரிவித்தார்.
அருண் ஜேட்லி, “பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கடன் தள்ளுபடி குறித்து வாக்குறுதி அளிப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் மூலம் கடன் செலுத்த வசதி உள்ளவர்களுக்கும் கடனைத் திருப்பித் தர மனம் வராது என அவர் காரணம் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் அனைத்து வங்கிகளிலும் தேவையற்ற கடன் சுமை உண்டாகி மாநிலங்களும் செயல் பட இயலாத நிலை ஏற்படும் எனவும் அந்த அதிகாரி கடிதத்தில் தெரிவித்துளார்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த முன்னாள் வங்கி ஆளுனரின் பெயரையும், அந்தக் கடிதம் எப்போது எழுதப் பட்டது என்பதையும் தெரிவிக்க அருண் ஜேட்லி மறுத்துள்ளார். மேலும் அதே அதிகாரி, வேறு ஒரு நிகழ்வில் கடன் தள்ளுபடி மற்றும் உதவித் தொகைகள் கடன் கொடுப்போரின் நற்குணங்களை பாதிக்கும் என தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.