சிதம்பரம்:
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று பிரசித்தி பெற்ற ஆரத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி, இந்த ஆண்டு ஆரூத்ரா விழா கடந்த 1ந்தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் கடைசி நாளான இன்று ஆரூத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த 9 நாட்களாக பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது.
இந்த தேர் வீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நேற்று இரவு நிலைக்கு வந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தளினர். அவர்களுக்கு அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனம் தற்போது (2மணி முதல்) நடைபெற்று வருகிறது. நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகின்றனர்.
இதை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்து, நடராஜரின் அருளை பெற்று வருகின்றனர்.