புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இளையராஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 43.
ஓவியர் இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள்’ ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவர் இளையராஜா.
மறைந்த ஓவியர் இளையராஜா, தனது ஓவியங்களுக்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். 2009ஆம் ஆண்டு திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சி மிகவும் பிரபலம்.
இளையராஜாவின் மறைவுக்கு திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், வாசகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இளையராஜாவின் ஓவியங்களை இப்பக்கத்தில் காணலாம்:
https://www.artzolo.com/artist/s-elayaraja
தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! pic.twitter.com/1ssRWmzDjS
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021