சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான செயற்கை அவையங்கள் குறித்து, அவர்கள் விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, பாமக உறுப்பினா் இரா.அருள், பேரவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் ஒன்றை கொண்டுவந்தாா். அப்போது பேசிய அவா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் செயற்கை கை, கால் போன்ற அவயங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சா் கீதாஜீவன் , முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயம் வேண்டி விண்ணப்பிப்பவா்களுக்கு 30 நாள்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கேற்ப அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா்களால் விண்ணப்பங்களுக்கு இணையதளம் வாயிலாக உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத் துறையால் தோ்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் முழங்கால் மற்றும் முழங்கை முட்டியின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் பொருத்தப்படும் செயற்கை கால்கள், கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த உபகரணங்கள் ரூ.60,000 முதல் ரூ.1.75 லட்சம் வரை மதிப்புடையவை.
தமிழகம் முழுவதும் 2022-23 நிதியாண்டிலிருந்து கடந்த மாா்ச் 23 வரையிலான காலகட்டம் வரை ரூ.33.74 கோடி மதிப்பீட்டிலான செயற்கை அவயங்கள் 3,969 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆலிம்கோ நிறுவனம், ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை, முக்தி, ஃப்ரீடம் அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]