“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மானியக் கோரிக்கை விவாதங்களின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகும் முதலமைச்சர் தனியாக 110வது விதியின் கீழ் அதிக அறிவிப்புகளை வெளியிடுவது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.
a
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, “என்னைப் பொறுத்தவரை, தினம்தோறும் காலை முதல் மாலை வரை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.  என்ன புதிய திட்டங்களைக் கொண்டுவரலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
அதனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மானியக் கோரிக்கையை வைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, அந்த துறையைப் பற்றி யோசிக்கும்போது “அடடா, இதை விட்டுவிட்டோமே. இதையும் செய்யலாமே” என்ற யோசனை வருகிறது.  அப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளையே தான் வெளியிடுகிறேன்” என்று பதில் அளித்தார்.