டில்லி

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேட்டுக் கொண்டுள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   மேலும் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.  இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் ஒருவர் ஆவார். அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கிறார்.  அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  இந்த மாதம் 2 ஆம் தேதியன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தை நேற்று சசி தரூர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த கடிதத்தில், ஃபரூக் அப்துல்லா, “தாங்கள் 2019 ஆம் வருடம் அக்டோபர் 21 ஆம் தேதி எழுதிய கடிதத்தை இன்று என்னைச் சிறையில் கவனித்துக் கொள்ளும் நீதிபதி எனக்கு வழங்கினார். இந்த கடிதத்தை  உடனடியாக எனக்கு வழங்கைல்லை என்பது துரதிருஷ்ட வசமானது.  ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு நடத்துவது சரியானது இல்லை என நான் கருதுகிறேன்.  நாங்கள் கிரிமினல்கள் இல்லை” என எழுதி உள்ளார்.

 

இது குறித்து சசி தரூர் அந்தப் பதிவில், “ஃபரூக் அப்துல்லா எழுதி உள்ள கடிதம் இது.  பாராளுமன்றம் அளித்துள்ள சலுகையின்படி அனைத்து உறுப்பினர்களும் கூட்டத் தொடர்களில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.  இல்லையானால் கைது என்பது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கப்  பயன்படும் ஒரு கருவியாக மாறிவிடும்.   அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பது அவையின் பெருமைக்கும் ஜனநாயகத்துக்கும் அவசியத் தேவையாகும்” எனப் பதிந்துள்ளார்.