சென்னை: அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில், யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்தியஅரசு உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகத்திலும், தேர்ச்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் அரியர் தேர்வுக்கு மாணாக்கர்கள் பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள் என தமிழகஅரசு உத்தரவிட்டது.
இதற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்பட்சத்தில் தான் அதில் பிரச்சினை ஏற்படும். ஆனால் அரியர் தேர்வுகளை ரத்துசெய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அதுபோல வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படவில்லை.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசு, யு.ஜி.சி. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.