சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மேலும் அதிகமான தேர்வு மையங்களை உருவாக்குங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களிலேயே தேர்வெழுதும் வகையில் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நீட் தேர்வுக்காக, நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்காமல், பிற மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால், தேர்வு எழுதும் மாணாக்கர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், செலவும் அதிகமாகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட்டிருந்தார். அவரது மனுவில், நீட் தேர்வு எழுத தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களையே தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவர்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடும் என்பதால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால், மற்றவை என்று குறிப்பிட்டால், அதை பரிசீலித்து, அவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து, மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.