டில்லி
வெளிநாட்டு சிறைகளில் சுமார் 7620 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஜே அக்பர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எம். ஜே. அக்பர் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது :
”இதுவரை கிடைத்த தகவலின்படி7620 இந்தியர்கள் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 56% அராபிய நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும், 2084 பேர் சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளனர். அதிகமானோர், பண மோசடி திருட்டுக் குற்றங்களுக்காக அடைபட்டுள்ளனர். அது தவிர முழு மதுவிலக்கு உள்ள சவுதியில் மது அருந்தியமைக்காகவும், மதுவை விற்றதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலே சொல்லப்பட்ட 7620 கைதிகளில் 50 பேர் பெண்கள். அவர்கள் இலங்கை, சீனா, அராபிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா ஆகிய நாடுகளில் சுமார் 500 பேர் விசா ஏமாற்றுதல், போதை மருந்து மற்றும் ஆள்கடத்தல் ஆகிய குற்றங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள 504 கைதிகளில் 500 பேர் எல்லை தாண்டிய மீனவர்கள் ஆவார்கள். அதே போல இலங்கையிலும் பெரும்பாலானவர்கள் எல்லை தாண்டிய மீனவர்களே ஆகும்
ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 115 பேர் கொலை, பலாத்காரம், பண மாற்றம், சாலை விபத்துக்கள் ஆகிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களிடம் உள்ள இந்தியக் கைதிகளின் விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டன.
இது வரை 30 நாடுகளில் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களின் படி 170 கைதிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதே போல மற்றும் உள்ள கைதிகளும் சிறிது, சிறிதாக அழைத்து வரப் படுவார்கள்”
இவ்வாறு அகபர் தெரிவித்துள்ளார்.