நியூயார்க்

டல் நீர் ,மட்டம் உயர்ந்து வருவதால் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல நூற்றாண்டுகளாகக் கடலின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் நீரில் முழுகி உள்ளன.  உதாரணத்துக்கு எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா என்னும் நகரம் கி பி 330ஆம் வருடம் அலெக்சாண்டரால் அமைக்கப்பட்டது.  தற்போது அது கடலுக்கடியில் உள்ளது.  தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகரான பூம்புகார் என அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கி உள்ளது.

சமீபத்தில் கடல் நீர் உயர்வால் முழுக உள்ள கடற்கரை நகரங்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது.   செயற்கைக் கோள் தகவல்கள், பல இடங்களில் கடல் நீர் மட்ட உயர்வு, ஆகியவற்றை வைத்துக் கணக்கிடும்போது முன்பு தெரிவித்ததை விட மேலும் பல நகரங்கள் நீரில் முழுகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அத்துடன் தற்போது கடல் நீர் மட்டம் உயரும் இடங்களில் சுமார் 15 கோடி மக்கள் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

உலகின் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் கடலில் முழுக வாய்ப்புள்ளது.  குறிப்பாக தெற்கு வியட்நாம் பகுதியில் அனைத்து நகரங்களும் வரும் 2050க்குள் முழுமையாகக் கடலில் முழுகலாம்.   இந்த பகுதிகளில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர்.  இது வியட்நாம் நாட்டு மக்கள் தொகையில் கால் பகுதி ஆகும்.

தாய்லாந்தில் முன்பு எதிர்பார்த்ததை விட 10% அதிக பகுதிகள் நீரில் முழுக வாய்ப்புள்ளது.  குறிப்பாக பாங்காக் நகரம் முழுவதுமாக முழுகும் அபாயத்தில் உள்ளது.  தற்போது தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை இருந்த போதிலும் பல மக்கள் விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களில் வந்து பணி புரிந்து வருகின்றனர்.

ஆசியாவின் பெரிய வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் 2500 வருடத்துக்குள் நீரில் முழுகும் நிலையில் உள்ளன.  இந்த பகுதிகளில் சுமார் 11 கோடி பேர் வசிக்கின்றனர்.  எனவே இந்தப் பகுதிகளில் கடற்கரை மதில் உள்ளிட்ட அமைப்புக்களை உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாகும்.  இந்நகரம் வரும் 2050க்குள் முழுமையாக நீரில் முழுக உள்ளதாக அச்சம் உள்ளது.   முன்பு இந்தப் பகுதிகளில் இருந்த பல தீவுகள் தற்போது நீரில் முழுகி உள்ளன.  எனவே இந்த நகரில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இந்த ஆய்வின் மூலம் கடற்கரை நகர வாசிகளைக் காக்க அந்நாட்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.  அத்துடன் இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடி பெயர்வதன் அவசியமும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு ஒரு எச்சரிக்கை மணி என்பது குறிப்பிடத்தக்கது.   எனவே இதை தீவிரமாகக் கருதி அரசு மற்றும் மக்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.