வாஷிங்டன்: மைனாரிட்டி காங்கிரஸ் பெண் உறுப்பினர்களை மோசமாக விமர்சனம் செய்த காரணத்திற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் முன்னாள் அதிரடி ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு.
இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், சொந்தக் கட்சியிலிருந்தே, தமது கட்சியின் அதிபரான டொனால்டு டிரம்ப்பை விமர்சிக்கும் சிலரில் அர்னால்டும் ஒருவர். இவர் முன்னாள் கவர்னரும்கூட.
இல்ஹன் ஒமர், ரஷீதா லெய்ப், அயன்னா பிரெஸ்லே மற்றும் அலெக்ஸான்ட்ரியா ஒகாஸியோ-கார்டெஸ் என்ற நால்வரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர் என்றும், அவர்கள் எத்தகைய மோசமான இடத்திலிருந்து வந்தார்களோ, அங்கேயே சென்றுவிட வேண்டுமென்றும் விமர்சனம் செய்திருந்தார்.
டிரம்ப்பின் கருத்துக்கு பல தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அர்னால்டும் அதில் சேர்ந்து கொண்டுள்ளார். “டிரம்ப்பின் விமர்சனம் அமெரிக்க தன்மை இல்லாதது, உண்மையில்லாதது மற்றும் கண்ணியமில்லாதது.
இது வெறுப்பிற்குரியது, கரடுமுரடானது மற்றும் பிரித்தாளக்கூடியது. அமெரிக்கா என்பது நீங்கள் எங்கேப் போகிறீர்கள் என்பதை குறிக்கும் நாடே தவிர, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதைக் குறிக்கும் நாடல்ல. அதுதான் இந்த நாட்டின் பெருமை” என்றுள்ளார் அர்னால்டு.