டெல்லி: இந்திய – சீன எல்லையில் தொடரும் பதற்றம் காரணமாக ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் லடாக் கால்வன் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் மூண்டது.
சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், 2 ராணுவ வீரர்களும் வீர மரணமடைந்தனர். அதன் காரணமாக, இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா கொடுத்த பதிலடியில் 5 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதனிடையே ராணுவ தளபதி நரவனே பதான்கோட் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட இருந்தார். பதற்றம் அதிகரிப்பின் காரணமாக, அந்த பயணத்தை தற்போது ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்கியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. இந்திய படைகள் எல்லை தாண்டுவதை தடுக்கவும், ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதையும் இந்தியா தடுக்க வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.