சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்   ஆட்டோ ஓட்டுநர் திருமலைக்கு  இன்று திடீரென  நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறை துறையினர் சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களிடம் அதிரடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை  மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் பட்டப்பகலில்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவத்தில்  அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உள்பட 27 பேர் இதுவரை  கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து  போலீசார் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி மகன் சதீஷ்,  திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி,  வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.: இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் பூந்தமல்லி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.