சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, சென்னையில் குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 6-ம் தேதி, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதுமட்டுமின்றி திமுகவுன் கூட்டணி கட்சிகளும், ஆதரவாளர்களும்கூட ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து திமுக அரசுமீது குற்றம் சாட்டினார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் திமுக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதால், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து , மாநகர காவல் ஆணையராக இருந்த ரத்தோர், இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை சென்னை காவல்துறை பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக (பயிற்சி) நியமித்த தமிழ்நாடு அரசு, சென்னை மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக அருண், (கூடுதல் தலைமை இயக்குநர் / சட்டம் மற்றும் ஒழுங்கு) நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, காவல்துறை தலைமையகத்தில் ஏடிஜிபியாக (எல்&ஓ) மற்றொரு அனுபவமிக்க அதிகாரி எஸ் டேவிட்சன் தேவாசீர்வதம் நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாநகர போலீஸ் கமிஷனர் அருண், தனது முதல் பேட்டியிலேயே ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், அவர்கள் பாணியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளயின திருவேங்கடம் என்பவரும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் ரவுடிகளை களையெடுக்கும் பணி தொடங்கியது. இதுதொடர்பாக ஒவ்வொரு பகுதி காவல்துறை ஆய்வாளர்களுக்கும், ரவுடிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதது. மேலும், சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் தீவிர தணிகைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு சோதனையில் 77 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நான்கு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்தல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று முடிந்த பிறகே காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து, இத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறை அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததன் விளைவு 66 உயிர்கள் பறிபோயின. அதன்பிறகே கள்ளச்சாராய வேட்டையை நடத்திய காவல்துறையினர் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தையும் அழித்தனர். அதுபோலவே தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு குற்றவாளிகள் வேட்டையாடப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களை கண்காணித்து முன்கூட்டியே தடுக்க வேண்டிய காவல்துறை, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுவதுபோல, சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்றுமுடிந்த பிறகு, தாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறுவதால் எந்தவொரு பயனும் இல்லை.