சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டியடித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்வதாகவும், பாஜக மட்டுமே சிபிஐ விசாரணை கோருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன் , தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்சனைகளை உருவாக்க சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன என்றவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது என்றார்.
ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார் , எடுத்த எடுப்பிலேயே அவர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது. அதனால், ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றவர், ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர் என சாட்டை முருகனை விமர்சித்தவர், நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது என்றார்.
புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, 6 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு ஜூலை 7 அன்று காலை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்படும் எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் கோரிக்கை (சிபிஐ) குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் இறுதி நிகழ்வில் பங்கேற்று பேசிய திருமாவளவன், “இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் முன் வைக்கும் கோரிக்கை. அதனாலேயே மாயாவதி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவதற்கான கட்டாயம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும், இதற்கு பின்னால் உள்ள கூலிப்படையினர் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தலித் தலைவர்கள், சிறிய அளவில் இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது” என்று பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக பிரமுகர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் திமுகவுக்கு எதிராக பேசி வந்தன. இந்த நிலையில், திருமா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.
சிபிஐ போன்ற மத்திய விசாரணை முகமைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக, இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது என்று ஊடகங்கள் விமர்சித்து வந்த நிலையில், இன்று சிபிஐ விசாரணை தேவை என பாஜக மட்டுமே வலியுறுத்துவதாக கூறி, தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்துள்ளார்.