டெல்லி:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என அதிருப்தி தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை மாதம் கூலிப்படை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்மையில் உயிரிழந்த வட சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதுடன், காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முழு விசாரணை நடத்தி 7,400 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது சரியானது அல்ல எனவும் தனது வாதத்தை தமிழக அரசு முன்வைத்தது. அதனை கேட்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்ற வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக எதிர்மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.