சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினர் என்று கூறப்படுகிறது.
இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்ததும், இவரது தந்தை திருநாவுக்கரசு சென்னை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்தது. ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ந்தேதி அன்று மாலை மக்கள் நடமாட்டம் உள்ள சென்னை பெரம்பூர் பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளி என கருதப்படும் திருவேங்கடம் என்பவரை என்கவுண்டனர் செய்தனர். விசாரணை நடைபெற்றுகொண்டிருக்கும்போதே நடைபெற்ற இந்த என்கவுண்டர் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான குற்றவாளிகளை காப்பற்றவே இந்த என்கவுண்டர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்படுள்ள நபர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்து, பல நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல ரவுடியின் மனைவியும், வழக்கறிஞருமான அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹரிதரன் ஆகியோரை என பலரை கைது செய்து வந்ததுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்ட சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இநத் வழக்கில், தற்போது 18வதாக சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்துள்ளனர். பிரதீப் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினர் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான, விசாரணையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட நபர்களும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.