சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை காரணமாக அவரது உடல் சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப் பட்டு உள்ள நிலையில், அங்கு அவரது கட்சி தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தி உள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள், சென்ட்ரல், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு உள்பட வடசென்னை பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதந்த நிலையில், மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று நள்ளிரவு முதல் ஓட்டேரி, பெரம்பூர், புளியந்தோப்பு பகுதிகளில் அவர்களது ஆதரவாளர்கள் கூடியுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், அவரது உடல் மருத்துவமனையில் உள்ளதால், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பல தரப்பினரும் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
இதில் ஒரு தரப்பினர், ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட வெளியே செல்ல முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.