சென்னை:  தமிழ்நாட்டை உலுக்கிய கொலை சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது.  பகுஜன் சமாஜ் என்ற தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பட்டு வருகிறது. இந்த படுகொலையைத் தொடர்ந்து,  பெரம்பூர், அயனாவரம், கொளத்தூர், ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில்  நள்ளிரவு முதலே பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கொடூர படுகொலைக்கு,  பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர்  எல்.முருகன்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பலர் தங்களது கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து உள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள்  வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில்,  இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா?, தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்து விட்டது, இந்த படுகொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன்,  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து உள்ளதாகவும்,  ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை படுகொலை செய்வதற்கான தைரியம் எப்படி வருகிறது?, காவல்துறை ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு, போதைபொருள் நடமாட்டம் போன்றவற்றை கண்காணிக்க தவறி விட்டதாகவும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களை மட்டுமே கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மொத்தத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும்  குற்றம் சாட்டி உள்ளன.

மாயாவதி:

பிஎஸ்பி மாநில தலைவர்  ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்ட  சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞரான அவர், தமிழ்நாட்டின் வலிமையான தலித் குரலாக அறியப்பட்டார். குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்:

இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது  எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளது. வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது. போலி திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.

திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:

அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால்  கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, ஸ்டாலின்  அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்  எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும். மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்.

அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.