டில்லி
பி எம் கேர்ஸ் நிதிக்கு முப்படையினரின் ஒரு நாள் சம்பளமான ரூ.203.67 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு நிவாரணம் அளிக்கப் பிரதமர் மோடி நிறுவி உள்ள பி எம் கேர்ஸ் என்னும் நிதியம் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிதியத்துக்குப் பலரும் நிதி அளித்துள்ளதாகவும் மேலும் நிதியத்தில் இருந்து செய்யப்பட்ட செலவுகள் குறித்த கணக்குகள் ஏதும் வெளி வரவில்லை எனவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்து வருகின்றன. இந்த நிதியத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள், பொதுத் துறை வங்கிகள் எனப் பல இனங்களில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முப்படைகளான, ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல் படை வீரர்களிடம் இருந்தும் நன்கொடை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு விமானப் படை மற்றும் கடற்படை விவரங்கள் அளித்துள்ளன. ராணுவப்படை விவரம் ஏதும் அளிக்கவில்லை எனினும் ஏற்கனவே இது குறித்து டிவிட்டரில் பொது அறிவிப்பு ஒன்றை அளித்துள்ளது.
இந்திய விமானப்படை மொத்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ,.29.18 கோடி நிதி அளித்துள்ளது. இது ஏப்ரலில் ரூ.25.03 கோடி, மே மாதம் ரூ.75.24 லட்சம், ஜூன் ரூ.1.08 கோடி, ஜூலை ரூ.73.93 லட்சம், ஆகஸ்ட் ரூ.61.18 லட்சம், செப்டம்பர் ரூ.50.27 லட்சம், அக்டோபர் ரூ.46.70 லட்சம் என அதைக்கபடுள்ளது.
இந்தியக் கடற்படை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ.12.41 கோடி நிதியை பி எம் கேர்ஸ்க்கு அளித்துள்ளது. இதில் மாலுமிகள் மற்றும் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியமாக மட்டும் ரூ.4.38 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மற்றவர்களும் நிதி அளித்துள்ளதாகவும் இதற்கான தனித்தனி விவரங்கள் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினரின் விவரங்கள் அளிக்கப்படவில்லை எனினும் கடந்த மார்ச் மாதம் 29 அன்று டிவிட்டர் மற்றும் அரசாணை மூலம் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது முப்படைகளின் மொத்த ஒரு நாள் ஊதியமாக ரூ.203.67 கோடி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.