தஞ்சாவூர்:

ர்ச்சைக்குரிய தஞ்சாவூர் திருவள்ளுவர் சிலைக்கு  உத்திராட்ச கொட்டை மாலை அணிவித்து,  காவி உடை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்ட  இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர் – வல்லம் சாலையில் அமைந்திருக்கும் பிள்ளையார் பட்டி என்ற ஊரில் அமர்ந்த நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு மாட்டுச் சாணத்தை வீசி அவமரியாதை செய்திருந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவமரியாதை செய்த நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

இந்த நிலையில், இன்று அங்கு வந்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையிலான நிர்வாகிகள், திருவள்ளுவர் சிலைக்கு உத்திராட்ச  மாலை அணிவித்து காவி உடை அணிவித்தார். பின்னர் சிலையின் கை, உடம்பில் விபூதி பூசினார். அதைத்தொடர்ந்து சூடம் ஏற்றி தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஊடகங்களிலும் வெளியானது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்,  பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் திருக்குறளின் பெருமைகளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் பேசி வருவது பாராட்டுக்குரியது, அது அவர் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்றை காட்டுகிறது என்று பாராட்டியவர்,.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க., தி.க. போன்ற கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதுபோல,  பிள்ளையார் பட்டி  திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கும், தி.மு.க.வுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கின்றேன் என்று கூறினார்.

மேலும், சிலர் இந்துக்களை பற்றி அவர் தவறாக பேசி வருவதை கடுமையாக கண்டிப்பதோடு,  திருவள்ளுவர் சிலைக்கும் இந்து முறைப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

அர்ஜுன் சம்பத் செயலால் பிள்ளையார்பட்டியில் மீண்டும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கும்பகோணம் அருகே வைத்து அர்ஜூன் சம்பத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது,  சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கியதாக அர்ஜூன் சம்பத் மீது தஞ்சையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அர்ஜுன் சம்பத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.