சென்னை: அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்தியவர்கள் ‘தேர்ச்சி’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னைப் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் இதை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்தியிருந்த அனைத்து மாணவர்களும் ‘தேர்ச்சி’ என்றதொரு அறிவிப்பு, முன்னர் வெளியாகியிருந்தது. ஆனால், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதேசமயத்தில், பல்கலைக்கழகங்கள், இந்த அரியர் தேர்வுகளை மீண்டும் நடத்திக்கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சென்னை பல்கலையின் கீழ்வரும் அனைத்துக் கல்லூரிகளிலும், வரும் 21ம் தேதி முதல் அரியர் தேர்வுகள் நடைபெறும் என்று பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலையின் கீழுள்ள 115 கல்லூரிகளைச் சேர்ந்த 1 லட்சத்து ஒன்பதாயிரம் மாணவர்கள் தங்களின் அரியர் தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தியிருந்தனர். அவர்கள் அனைவரும் ‘பாஸ்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு, அரியர் வைத்திருந்தவர்கள் மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.