சென்னை: கடந்த ஆண்டு (2020) கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டபோது, கல்லூரி அரியர் தேர்வுகளுக்கு பணம் கட்டிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். இதற்கு மாணவ சமூதாயத்தினரிடையே கடும் வரவேற்பு எழுந்தது. ஆனால், வழக்கு காரணமாக, அதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அரியர் மாணவர்கள், நூதன முறையில், நன்றி தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதை கண்ட முதல்வரும் நெகிழ்ச்சியடைந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2வது கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் முக்கிய வீதி வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்.
அப்போது, திடீரென, சாலை அருகே இருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் இருந்து, சிலர், முதல்வரை நோக்கி அழைப்பு விடுத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்து, கட்டிடத்தின் மொட்டை மாடியை பார்க்க, அங்கே முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
‘அரியர் பசங்க நாங்க, எங்க ஓட்டு இரட்டை இலைக்கே’ என்ற பதாகையை ஏந்தியபடி சில மாணவர்கள் நூதனமான முறையில் நன்றியை தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட முதல்வரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது போன்ற பிரகாசம் பளிச்சிட்டது. மாணவர்களை பார்த்து கையைத்து, அங்கிருந்து கடந்து சென்றார். இதுகுறித்து, அந்த பகுதி கட்சி நிர்வாகிகள், அரியர் மாணவர்களுக்கு பாஸ் அறிவிப்பு வெளியிட்டதால் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக எடுத்துக்கூறினர்.
கல்லூரி அரியர்ஸ் மாணவர்களின் வித்தியாசமாக நன்றிக்கடன் செலுத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.