தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறும் அண்ணாமலை அதை உறுதிப்படுத்த தேர்தலில் போட்டியிட தயாரா ? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள தினமும் தான் செல்லும் இடமெல்லாம் வெண்கல கடைக்குள் புகுந்த யானை மாதிரி எதையாவது உளறிக் கொட்டி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதியை விட மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தவறான அறிக்கைகள், தரவுகளை கொடுப்பதன் மூலம் அவரது கட்சியையும் அவரது ஆதரவாளர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறார்.
மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து விவாதங்கள் நடத்துவதற்கு பதிலாக தான் உளறுவதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.
பாஜகவிற்கு தமிழகத்தில் எழுச்சி உள்ளதாக பேசிவரும் அக்கட்சியினர் தங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற முடியுமா ? என்று சவால் விடுத்துள்ளார்.
2014ம் ஆண்டு தேர்தலில் மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் கடந்த 9.5 ஆண்டு காலமாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 1.50 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்று வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பின் போது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசினார்.