டெல்லி: நாங்கள் குற்றவளிகளா என்று கேள்வி எழுப்பிய திகாயத், நாடாளுமன்ற பருவமழை கூட்டத்தொடருக்கு எதிராக நாங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம் என ஜந்தர் மந்தரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கத் தலைவர் திகாயத் கூறினார்.
வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 200 நாட்களை கடந்து தொடர்கிறது. இதுவரை டெல்லி எல்லையில் நடைபெற்று வந்த போராட்டம் இன்றுமுதல் பாராளுமன்றத்தின் கவனத்தை பெறும் வகையில் டெல்லிக்குள் ஜந்தர்மந்தர் பகுதியில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகளுக்கு அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டெல்லி மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் போராட்டத்தைக் களத்தை விட்டு வெளியேறாத வாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாநில எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த விவசாயிகள் தனியார் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்துக்கொண்டு தனி காரில் பாரதிய கிஷான் விவசாயகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்தும் வந்திருந்தார். ஜந்தர்மந்தரில் போடப்பட்டுள்ள பாதுகாப்பை கண்டறிந்த திகாயத் ஆவேசமடைந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திகாயத், நாங்கள் குற்றவாளிகளா? என்று கேள்வி எழுப்பியவர், பாராளுமன்றம் ஜந்தர் மந்தரிலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம் என்று கூறியதுடன் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று ஆவேசமாக கூறினார்.
ஜந்தர்மந்திரில் நாள் ஒன்றுக்கு 200 விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏராளமான விவசாயிகள் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. விவசாயிகள் திடீரென நாடாளுமன்றத்தை முற்றுகையிடலாம் என்பதால், போராட்டம் நடைபெறும் இடங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.