சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பல ஒபிஎஸ் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த மனு காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்தது. இதையடுத்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உள்ளதாக கூறினார்.
மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.