‘நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிரச்சாரம் எப்படியானதோ, அப்படியானதுதான் ‘தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள்’ என்ற பிரச்சாரமும்.
2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வெளியானதோ இல்லையோ, உடனே ஒரு தரப்பார், உணர்வு சிலிர்ப்பால் பொங்கத் தொடங்கிவிட்டனர்.
இது பெரியாரின் மண்! இவர்கள் அறிவார்ந்த மக்கள். இவர்கள் ஒருபோதும் மோடியையோ அல்லது காவிகளையோ ஆதரிக்கமாட்டார்கள். தாமரை இங்கு ஒருபோதும் மலரவே மலராது என்பனபோன்ற வசனச் சிதறல்கள் எங்கும் தெறித்தன.
ஆனால், தேனி நாடாளுமன்ற தொகுதியின் முடிவும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் அதனோடு சேர்த்தேதான் வெளியானது. அவற்றை ஏனோ கவனிக்கவில்லை அல்லது தவிர்த்துவிட்டனர் அந்த உணர்வாளர்கள்!
மோடிக்கு மிகவும் நெருக்கமான பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை தேனி மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர் மற்றும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான 9 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திற்கு பட்டனை அமுக்கிவிட்டனர் அவர்கள் சொன்ன அந்த வாக்காளர்கள்!
திருப்பரங்குன்றம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் போன்ற சிலபல சட்டமன்ற தொகுதிகளில், அமமுக, இரட்டை இலைக்கான வாக்குகளைப் பிரித்ததால், அதிமுக தோற்றதே ஒழிய, வாக்காளர்கள் ஒன்றும் இரட்டை இலையைப் புறக்கணித்து விடவில்லை.
சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் பிற மக்களவைத் தொகுதிகளோடு ஒப்பிடுகையில், பணம் காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்தது. ஆட்சியால் எவ்வளவு சீரழிந்தாலும், தாங்கள் எதிர்பார்க்கும் சில ஆயிரங்கள் கிடைத்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு, அதிகப் பணம் கொடுத்தவர்களுக்கே பட்டனை அமுக்கிவிட்டனர் இந்த அறிவார்ந்த மண்ணின் வாக்காளர்கள்.
தாமதமாக நடைபெற்ற வேலூர் மக்களவை இடைத்தேர்தலில், மோடியின் கூட்டணியில் போட்டியிட்டும், காஷ்மீர், முத்தலாக் உள்ளிட்ட சமாச்சாரங்கள் இருந்தும், வெறும் 8000+ வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றார் ஏ.சி.சண்முகம்.
இதோ, இப்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தல்களில், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு மோசமான ஆட்சியை அனுபவித்து வந்தாலும், மீண்டும் இரட்டை இலைக்கே பொத்தானை அமுக்கியுள்ளனர் அறிவார்ந்த தமிழக வாக்காளர்கள். அங்கே, அதிகளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவும் காங்கிரசும் தோற்றுள்ளன.
தமிழக வாக்காளர்கள் அறிவுப்பூர்வமானவர்கள் அல்லர்; உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்கள் எதற்கொல்லாம் வாக்களிப்பார்கள் என சற்று மேலோட்டமாகப் பாருங்களேன்:
எதிர்ப்புணர்வில் வாக்களிப்பார்கள், கிளப்பி விடப்படும் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி வாக்களிப்பார்கள்(உதாரணம்: 2ஜி), சினிமா கவர்ச்சிகளுக்கு வாக்களிப்பார்கள், ஜாதிக்கு வாக்களிப்பார்கள், அரசியல் கூட்டணிகளுக்கு வாக்களிப்பார்கள், குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தின் மீதுள்ள விசுவாசத்திற்காக வாக்களிப்பார்கள், கிளப்பிவிடப்படும் அனுதாப உணர்வில் வாக்களிப்பார்கள், இவை அனைத்திற்கும் மேலாக, சில ஆயிரங்கள் பணத்தை அள்ளி வீசினால் வாக்களிப்பார்கள்.
ஆக மொத்தத்தில், அறிவைப் பயன்படுத்தி எப்போதுமே வாக்களிக்கமாட்டார்கள். பொதுவான இந்திய வாக்காளனுக்கு இருக்கும் ஒரு மந்த மற்றும் மொக்கையான மனோநிலைதான் இவர்களுக்கும் உண்டு. தமிழக வாக்காளர்களை, பிற இந்திய வாக்காளர்களிடமிருந்து பெரிதாகப் பிரித்துப் பார்த்துவிட முடியாது.
கடந்த 1972ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் முதற்கொண்டே, தாங்கள் அறிவுப்பூர்வ வாக்காளர்கள்(!) என்பதை நிரூபித்து வருகிறார்கள் தமிழக வாக்காளர்கள்!
தமிழகத்தில் அமைப்பு பலம் இல்லாத பாரதீய ஜனதா, அதிமுகவின் உதவியுடன், தான் போட்டியிடும் தொகுதிகளில், வெறித்தனமாக இறங்கி, பணத்தை வாரியிறைத்தால், அந்தக் கட்சியும் இங்கு வெற்றிபெறவேச் செய்யும்.
தாங்கள் ஒரு ஆட்சியினால் எப்படி அல்லல்படுகிறோம் மற்றும் தங்களின் வாழ்க்கை நிலை எப்படியெல்லாம் தாழ்ந்துள்ளது என்பதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குப் பிரச்சினையில்லை. தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சில ஆயிரங்கள் இவர்களின் விசுவாசத்தைக் கட்டிப்போடக்கூடியது.
2ஜி ஊழல் என்பதாக சில அதிகாரிகளின் உதவியுடன், பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணிகளால் கிளப்பிவிடப்பட்ட பூதத்தால், தங்கள் பையிலிருக்கும் பணமே களவாடப்பட்டுவிட்டதாக நம்பி வாக்களித்த மக்கள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பேருந்துக் கட்டணங்கள் இருமுறை இருமடங்குகள் உயர்வு, பால்விலை இருமுறை உயர்வு போன்றவற்றின் மூலம் உண்மையிலேயே தங்கள் பையிலிருந்த பணம் களவாடப்பட்டபோது கலங்கவேயில்லை மற்றும் இன்னும் சுதாரிக்கவேயில்லை.
இவைதவிர நீட் தேர்வு, உதய் மின் திட்டம், டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள், தலைமைச் செயலகம் முதற்கொண்டு ஆளும் வர்க்கம் சார்ந்த இடங்களில் நடத்தப்படும் ரெய்டுகள், சென்னை வெள்ளப்பெருக்கு, செயல்படாத அரசு நிர்வாகம் உள்ளிட்ட எத்தனையோ காரணிகள் இருந்தாலும், சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு, அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறார்கள்.
2019 நாடாளுமன்ற தேர்தலில்கூட, தமிழக ஆளுங்கட்சியின் தரப்பில் பணப்பட்டுவாடா திட்டமிட்டப்படி நடைபெறவில்லை என்பதே பலமுனை தகவல் மற்றும் ஆளுந்தரப்பு அவற்றில் பெரிய அக்கறை காட்டவில்லை என்பதும் அதனோடு சேர்ந்த ஒரு கொசுறுத் தகவல். மற்றபடி, எல்லா இடங்களிலும் தேனி ஃபார்முலா பின்பற்றப்பட்டிருந்தால், தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு ஆதரவாகத்தான் வந்திருக்கும்!
மேலும், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் சிக்கித் திணறியதையும் யோசிக்காமல் விட்டுவிடலாகாது. எனவே, இது பெரியாரின் மண், அறிவார்ந்த மண், இந்த மக்கள் சிந்தனைத் திறன் கொண்டவர்கள் என்பன போன்ற வசனங்களையெல்லாம் தங்களின் சுய திருப்திக்காக பேசிக்கொண்டு சந்தோஷமடைந்து கொண்டிருக்கிறார்களா ஒரு தரப்பினர்? என்ற கேள்விதான் எழுகிறது.
எனவேதான் மற்றுமொருமுறை கூறத் தோன்றுகிறது; ‘நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிரச்சாரம் எப்படியானதோ, அப்படியானதுதான் ‘தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள்’ என்ற பிரச்சாரமும்..!