அமராவதி:

டந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஆந்திரா வுக்கு வர வெட்கமாக இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, ஆந்திராவில் தெலுங்குதேசம் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மோடி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மோடி உறுதி அளித்தபடி சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று, தெலுங்குதேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று கன்னியாகுமரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு செல்கிறார்.

அங்கும் அவருக்கு, தமிழகத்தை போல கருப்புச்சட்டை அணிந்து தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்ர் சந்திரபாபு நாயுடு. மோடிக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், பாஜகவின்  5 ஆண்டுகாலம் ஆட்சியில் ஆந்திராவிற்கு  ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதி கூட  நிறைவேற்றப்பட வில்லை. நான் 29 முறை டெல்லிக்கு சென்று தங்களை சந்தித்து, ஏராளமான மனுக்களை ஆந்திர மக்களின் சார்பாக அளித்துள்ளேன். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மக்கள் உங்கள் ஆட்சியின் துரோகம், ஊழல், ஏமாற்றுதல் ஆகியவற்றில் சிக்கி தவித்து வருகின்ற னர். ஆந்திர மக்கள் நடத்திய உரிமை போராட்டம் குறித்தும் பாஜக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. விசாகப்பட்டினத்திற்கு நீங்கள் வரும்போது, ஆந்திராவில் வசிக்கும் 5 கோடி மக்களின் கோபத்தினை பிரதிபலிக்க விரும்புகிறேன். அவர்களின் குரலாக உங்களிடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து  உங்கள் பொறுப்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவு கூர்கிறேன் என்றும்,   ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆந்திரா வருவதற்கு வெட்கமாக இல்லையா? 5 கோடி மக்களுக்கும் இந்த கேள்விக்கான பதிலளிக்க வேண்டும் என்றும் எழுதி உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்போது, நான் கருப்புச் சட்டை அணிவேன். என்னுடன் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து , கருப்புக் கொடி ஏந்தி எங்கள் எதிர்ப்பினை காட்டுவோம் என்றும் கூறி உள்ளார்.