வாஷிங்டன்: சீனாவில் தயாரிக்கப்படும் டிரோன்கள், பிற நாடுகளின் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீனா – அமெரிக்கா வணிகப் போரின் இடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனாவின் தொழில்நுட்பத் துறையானது கண்காணிப்பை செலுத்துவதால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது அமெரிக்கா.

சீனாவைச் சேர்ந்த டிஜேஐ நிறுவனம்தான் , உலகில் பயன்படுத்தப்படும் வணிக டிரோன்களில் 70% அளவிற்கு உற்பத்தி செய்கிறது. கடந்த 2017ம் ஆண்டு, இந்த நிறுவனம் தயாரித்த டிரோன்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

மேலும், சீனா நிறுவனமான ஹுவேய் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி தனது நெருங்கிய நட்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்கா.

ஹுவேய் நிறுவனம் சீன ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது என்றும், அதன்மூலமாக இதர நாடுகளின் ரகசியங்கள் கடத்தப்படலாம் என்றும் அமெரிக்கப் புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.