1968-ம் ஆண்டு மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம்.கே.அர்ஜுனன். சுமார் 200 படங்களில் பணியாற்றி 500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு 2017-ம் ஆண்டு பயானகம் என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. எம்.கே.அர்ஜுனன் இசையில் தான் முதன்முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடல் பாடினார். அதேபோல் 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் இசையமைத்த ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் முதலில் கீ போர்டு வாசித்தார்.

வயது மூப்பு காரணமாக இன்று கொச்சியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்த எம்.கே.அர்ஜுனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.கே.அர்ஜுனன் மறைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் :
”ஒரு முறை கனிவு காட்டினாலும் அது வாழ்நாள் வரை நிலைக்கும். எனது சிறுவயதில் எனக்கு நீங்கள் தந்த ஊக்கத்தையும், செலுத்திய அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். உங்களது முடிவில்லா மரபுக்கு உங்களின் எண்ணற்ற பாடல்கள் அத்தாட்சி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் எம்.கே.அர்ஜுனன் மாஸ்டர். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார் .