மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துஉள்ளார்.
“அனைத்து பொருட்கள் விலை வாசி உயர்வை கண்டித்து இன்று விருதுநகரில் இன்று தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மதுரை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா அங்கு செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசி உயர்வையை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
மேலும், நீட் தேர்வை பொறுத்தவரை ஆளுங்கட்சி மக்களை குழப்பக் கூடாது. நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும், அதே வேளையில், பெண்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதற்கான பொறுப்புணர்வு வேண்டும் என்றார்.
முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த பிரேமலதா, ஒரு தரப்பினர் குடும்ப சுற்றுலா என்கிறார்கள், மற்றொரு தரப்பினர், முதலீட்டை அதிகரிக்க சென்றதாக கூறுகிறார்கள் எதுவாக இருந்தாலும் இது மக்களுக்கான பயணமா அல்லது அவர்களுக்கான பயணமா என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். தமிழகத்திற்கு நல்லது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினாரி.
தொடர்ந்து பேசியவர், தமிழநாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 25% முதல் 50% வரை உயர்த்தலாம் ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை, இதை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியதுடன், சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.