தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திறன் படைத்தவை இந்த பசுமைவெளி பல்கலைக்கழகங்கள்.

மரபு வழி கல்வி பயிலும் பல்கலைக் கழங்கங்களைப் போன்று அல்லாமல் மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு ஊக்குவிக்கும் கல்வி திட்டத்திற்கு பசுமைவெளி (Greenfield) கல்வித் திட்டம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

பாடத்திட்ட வரம்பு சாராத பரந்த பயிற்சி அனுபவமிக்க கல்வி திட்டம் என்பதால் மாணவர்கள் தங்கள் திட்டங்களை முயற்சித்துப் பார்க்க தேவையான இடவசதியுடன் இந்தப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

100 ஏக்கர் நிலம் மற்றும் 50 கோடி ரூபாய் வைப்புத் தொகை வைத்துள்ள நிறுவனங்கள் இந்த பசுமைவெளி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 8 விண்ணப்பங்கள் வந்த நிலையில் 6 பசுமைவெளி பல்கலைக்கழத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதில், சவீதா மற்றும் ஜேப்பியார் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சிவ் நாடார் பல்கலைக் கழகம் பசுமைவெளி பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெற்றுள்ளது.

இந்த பல்கலைக் கழங்கங்களில் பாடத்திட்டம், கல்விக் கட்டணம் மட்டுமன்றி மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு முறையோ வேறு எந்த வரைமுறையோ இதில் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.