போபால்:

மாலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கக் கோரி  வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கடந்த 2008-ம் ஆண்டு மாலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக, பெண் சாமியார் சாத்வி பிரக்யா மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட சாத்வி பிரக்யாவுக்கு பாஜக சீட்டு கொடுத்துள்ளது.

இது தொடர்பாக, மலேகாவ் குண்டுவெடிப்பில் மகனை இழந்த நிஸார் அகமது சயித் பிலால் தேசிய விசாரணை ஏஜென்ஸி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், உடல் நலனை காரணம் காட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் பெண் சாமியார் பிரக்யா ஜாமீன் பெற்றார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி தினமும் நடக்கும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு அவர் மீது தேசிய விசாரணை ஏஜென்ஸி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி நான் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து நிறுத்துமாறு தேசிய விசாரணை ஏஜென்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய விசாரணை ஏஜென்ஸிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.