சென்னை

சிபிஐ நீதிமன்றம் 2 ஜி வழக்கில் ஆ ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்யப்பட்டது குறித்து ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.176000 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ   அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் ஆ ராஜா, கனிமொழி உட்பட பலர் மீது வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கில் சிபிஐ போதிய ஆதாரங்கள் அளிக்கவில்லை எனக் கூறி அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மேல் முறையீடு செய்தது.   அதைத் தொடர்ந்து சிபிஐ யும் மேல் முறையீடு செய்துள்ளது.    இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆ ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.   அதற்கு முன்னாள் அமைச்சர் ஆ ராஜா பதில் அளித்துள்ளார்.

ஆ ராஜா, “பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல் முறையீடு செய்ய சட்டப்படி உரிமை உண்டு.   ஒருவேளை நான் தண்டிக்கப்பட்டிருந்தால் நான் மேல்முறையீடு செய்யக் கூடாதா?   இதில் சிறப்பு ஏதும் இல்லை.  இயற்கையானதே.   மேலும் இதை நான் 100% எதிர்பார்த்தேன்.” என கூறி உள்ளார்.