சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி  ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில், தற்காலிக சபாநாயகராக நேற்று  (மே 10) பொறுப்பேற்றுக் கொண்ட திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

முன்னதாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, திமுக சார்பில், சபாநாயகர் பதவிக்கு, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்பாவு அவர்களும்,  துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கான கால அவகாசம் மதியம் 12 மணி வரை அளிக்கப்பட்டது. ஆனால்,அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவு, முதல்வர்  மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பாவு,  இரண்டு முறை சுயேட்சையாக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையிடம் அப்பாவு தோல்வியுற்றார். அந்த தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக, அப்பாவு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட அப்பாவு, சபாநாயகராக தமிழ்நாடு சட்டப்பேரவையை வழிநடத்த இருக்கிறார்.