லக்னோ
மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அப்னா தள் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவி அனுப்ரியா படேல்அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்னாதள் கட்சி இடம் பெற்றிருந்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி சார்பில் உத்திரப் பிரதேசத்தின் மிர்சாப்பூர் மற்றும் பிரதாப்கர் தொகுதிகளில் அப்னா தள் கட்சி இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த கட்சியின் தலைவி அனுப்ரியா படேல் மத்திய அமைச்சர் ஆனார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்னா தள் கட்சிக்கு பிற்படுத்தப் பட்டோர் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்தக் கட்சி வாரணாசி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலம் பொருந்திய கட்சி ஆகும்.
இந்நிலையில் இக்கட்சியின் தலைவி அனுப்ரியா படேல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். தங்கள் கட்சியை பாஜக தலைமை மதிப்பதில்லை எனவும் பலமுறை தாம் இது குறித்து பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் அனுப்ரியா படேல் கூறி உள்ளார்.