சென்னை:
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.
ஆண்டுதோறும், ஆகஸ்டு 15ந்தேதி நாடு சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளோரை இனங்கண்டு அவர்களுக்கு விருது வழங்கி கவுரப்படுத்தி வருகிறது தமிழகஅரசு.
இதன் ஒருபகுதியாக, மறைந்த குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற பெயரில் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதானது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு, இந்த விருதுக்கான அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கும் முகவரி:
அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 9 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்