டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரசானது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே கொரோனா பரிசோதனை நடைபெற்று வந்தது. அதன் பின்னர், பாதிப்பு அதிகரித்ததால் தனியார் மருத்துவமனைகளிலும் சோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதற்காக 4500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோன்று தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி தந்தது. விருப்பம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சொந்த செலவில் சோதனை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் தனியார் சோதனை மையங்களில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் சஷாங்க் தியோ சுதி தாக்கல் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அதில், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.  அந்த மனு இன்று நீதிபதிகள், அசோக் பூஷண் மற்றும் ரவீந்திர எஸ் பட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 118 ஆய்வகங்களில் இதுவரை 15,000 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்பதால் தனியார் மருத்துவமனைகளுக்கு  அனுமதி தரப்பட்டது. 47 தனியார் சோதனை மையங்களை உட்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி அசோக் பூஷண், தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அந்த கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.